பத்மநாப சுவாமி கோவிலுக்கு ரூ.1.67 கோடி தந்தது தமிழகம்
பதிவு செய்த நாள்
06
நவ 2019 11:11
சென்னை : திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலுக்கு, 2001 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகை, 1.67 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.
கேரளாவில் இருந்து, குமரி மாவட்டம், 1956ல் பிரிக்கப்பட்டது. அப்போது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, 1964ல், சட்டப்படி, தமிழக அரசு கையகப்படுத்தியது. அப்போது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட தொகையை, பத்மநாபசுவாமி கோவிலுக்கு, தமிழகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டம்: இத்தொகை, தஸ்திக் என அழைக்கப்பட்டது. 2001 முதல் நடப்பாண்டு வரை, தஸ்திக் தொகை வழங்கப்படவில்லை. அதை வழங்கும்படி, கோவில் நிர்வாகம், தமிழக அரசை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, நில நிர்வாக ஆணையர் தலைமையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக அலுவலர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 2001 முதல், 2019 வரை, 1.67 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்பு: அதன்படி, நிலுவைத் தொகைக்கான காசோலையை, கோவில் செயல் அலுவலரிடம், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தலைமை செயலர் சண்முகம், நிர்வாக இணை ஆணையர் கற்பகம் பங்கேற்றனர்.
|