அர்க்கன் என்றால் சூரியன் என்று அர்த்தம். அர்க்க இலைகள் என்பதே எருக்க இலைகள் என்று மாறிவிட்டது. சூரியனின் கிரணங்களை தன்பால் இழுத்துக் கொண்டு நல்ல தன்மை உள்ள கதிர்களையே நமது உடலில் பாயச் செய்யும் தன்மை எருக்க இலைகளுக்கு உண்டு. அதனால்தான் அவை சிறப்பாகக் கருதப்படுகின்றன. ரத சப்தமி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எருக்க இலைகளை தலை மற்றும் தோளில் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் என்றால் அதில் குங்குமமும் அட்சதையும் வைக்க வேண்டும்; ஆண்கள் என்றால் அட்சதை மாத்திரமோ அல்லது விபூதியும் அட்சதையோ வைக்க வேண்டும். நீராடும் முன் இவ்விலைகளை வைத்த பின் சற்று நேரம் சூரியக் கதிர்கள் அதன் மேல் விழும்படி நிற்க வேண்டும். பிறகு தலையில் தண்ணீர் ஊற்றி நீராடலாம்.
பிறகு வெல்லமும் நெய்யும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யவேண்டும். ஆதித்யனுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கலை சூடு ஆறுமுன் நிவேதனம் செய்துவிட வேண்டும். பிறகு ஆதித்ய ஹிருதயம் அல்லது தெரிந்த சூரியத் துதிகளைச் சொல்லி வணங்கலாம். குறைந்தது பத்து நிமிடமாவது அதிகாலை சூரிய ஒளி நம் மீது படரும்படி நிற்க வேண்டும். அன்று முழுவதும் பால், தயிர் போன்ற பொருட்களை உண்ணாமல் சர்க்கரைப் பொங்கல், கோதுமை தோசை போன்றவற்றை உண்டு விரதமிருக்க வேண்டும். மறுநாளும் அதிகாலையில் எழுந்து நீராடி விரதத்தை முடிக்கும் அறிகுறியாக பால் அருந்த வேண்டும். பின்னர் சூரியனுக்கு அர்க்கியம் எனப்படும் நீரை மூன்று முறை விடவேண்டும் பின்னர் பீஷ்மரை நினைத்து மூன்று முறை விட வேண்டும். இது முடிந்த பின் வழக்கமாக உண்ணும் உணவை எடுத்துக் கொள்ளலாம். இவ்விரதம் அனுஷ்டிப்பதால் ஆரோக்யமும், ஆனந்தமும் கூடும்.