பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து, பக்தர்கள் ஊர் திரும்ப, போதிய எண்ணிக்கையில் பஸ் இயக்கப்படாததால், சாலை மறியல் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இது தெரிந்தும், போக்குவரத்து அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணாமல், பக்தர்களை தவிக்க விடுவது, வேதனை அளிக்கிறது. திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமி திதி நேற்று முன்தினம் காலை, 10:54 முதல், நேற்று காலை, 10:20 மணி வரை இருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, ஐந்து மணி நேரத்துக்கும் மேல் கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டுகளுக்கு சென்றால், அங்கும் கூட்டம் அலைமோதியது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தவித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால், சிறுவர்கள், குழந்தையுடன் வந்தவர்களும், முதியவர்களும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் பஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, ரயில்வே மேம்பாலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வழக்கமாகவே கிரிவல நாட்களில், இதுபோல் மறியல் நடப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கதையாக உள்ளது. ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் தீர்வு காணாமல் மெத்தனம் காட்டுகின்றனர். குறிப்பாக அரசு பஸ்களை நம்பி கிரிவலம் செல்லும் பக்தர்கள், மாளாத வேதனையுடனே, ஊர் திரும்பும் நிலை உள்ளது.