மதுரை : சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் (ஏப்.23ல்) சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர். ராவணன் தன்னை மிகவும் பலவானாக நினைத்துக் கொண்டு, சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அவனது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கால் கட்டை விரலால் அழுத்த, மலையின் அடியில் சிக்கிக் கொண்டான். பின் தன் தவறை உணர்ந்து, இறைவா! என் பிழையைப் பொறுத்தருள்க” என்று வேண்ட, சிவன் மனமிரங்கி விடுவித்தார். உடல் பலம், செல்வ வளம் ஆகியவற்றின் காரணமாக மனிதனும் ஆணவம் கொள்கிறான். அதைப் போக்கவே, சிவன் கைலாயபர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும். தேவலோகத்திலுள்ள பசு காமதேனு. கேட்டதை வழங்கும் தன்மை கொண்டது. அதுபோல, பக்தர்கள் வேண்டுவதைத் தந்தருள மீனாட்சியும் காமதேனுவில் பவனி வருகிறாள். இந்த தத்துவத்தை மனதில் கொண்டு, மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்து மகிழ்வோம்.