சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான ஏப்.27ல் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் பவனி வருகின்றனர்.ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவர் சிவனருளால் புத்திரபேறு வாய்க்கப் பெற்றார். பிள்ளைக்கு சிவ நாமங்களில் ஒன்றான நந்தி என்று பெயரிட்டு வளர்த்தார். சகல கலைகளிலும் கற்றுத் தேர்ந்த நந்திக்கு, விதிப்படி அற்பாயுளே இருந்தது. இதை அறிந்த சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் கவலை தீர, நந்தி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டார். சிவனருளால் சிவகணங்களுக்கு தலைவராகவும், ஈஸ்வரர் என்ற பட்டமும் பெற்றார். அதனால் நந்திகேஸ்வரர் என பெயர் பெற்றார். கடவுளை நம்பினால் விதியை மாற்றலாம் என்பதை உணர்த்த நந்திகேஸ்வரர் மீது சிவன் பவனி வருகிறார். யானையும், சிங்கமும் இணைந்த உருவம் யாளி. மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமையால் கோபம் கொண்டு அலையும் சிங்கமும் அம்பிகையின் முன் அடங்கிக் கிடப்பது போல, ஆணவம், தற்பெருமை போன்ற கீழான குணம் மிக்க மனிதனும் கடவுளுக்கு கட்டுப்பட்டே தீர வேண்டும் என்பதை யாளி வாகனம் உணர்த்துகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசிப்போம்.