பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
11:04
மதுரை: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஏப்.29ல் இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் தங்களின் வீரத்தை நிலை நாட்டுவதற்காக, எல்லா தேசங்களுக்கும் படையெடுத்துச் செல்வது வழக்கம். பாண்டிய நாட்டின் இளவரசியான மீனாட்சியும் திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர்களின் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வென்று வெற்றி வாகை சூடினாள். அதன் பிறகு சிவனின் இருப்பிடமான கைலாயம் நோக்கிச் சென்றாள். நந்தீஸ்வரர் தலைமையில் சிவகணங்கள் போரிட்டுத் தோற்றனர். சிவபெருமானே போர் புரிய நேரில் வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரின் அழகைக் கண்ட மீனாட்சி நாணத்தால் முகம் சிவந்தாள். இவரே உன் மணாளர் என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது.இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கி, மனதில் தைரியம் உண்டாகும்.