சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
பெரிய உருவமும், அச்சுறுத்தும் கண்ணும், பற்களுமாக பார்ப்பவரை பயமுறுத்துவது பூதம். பிறவிப்பிணியும் பூதம் போல உயிர்களை எப்போதும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இறைவனைச் சரணடைந்தால்,அந்த பூதத்தை அடக்கி நம்மைக் கரை சேர்ப்பார். பூத வாகனத்தில் சிவனைத் தரிசித்தால் காரணம் இல்லாத பயம் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும்.
வெண்மை நிறம் கொண்ட அன்னம் தூய்மையின் அடையாளம். பாலும், தண்ணீரும் கலந்து இருந்தாலும் பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது. பாலும், தண்ணீரும் போல உலகத்திலும் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும் வாழ்வில் நல்லதை மட்டும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். இந்த உண்மையைச் சிந்தித்து, இன்று இரவு மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசிப்போம்.