மதுரை : சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்.28ல் மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி வருகிறாள். மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக அவதரித்தாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். வில்,வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். யாருக்கும் அஞ்சாத வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், மன்னன் மகளுக்கு பட்டம் சூட்டி நாட்டின் இளவரசியாக்கினான். இதனால் பாண்டிய நாடுகன்னிநாடு என்று பெயர் பெற்றது. கண்களை இமைக்காமல் குஞ்சுகளைத் தன் பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக நல்லாட்சி புரிந்தாள். இதனால், மீன் போன்ற கண்களைப் பெற்றவள் என்னும் பொருளில் கயற்கண்ணி மீனாட்சி என சிறப்பு பெயர் பெற்றாள். மதுரையும் தூங்கா நகரம் எனப்பட்டது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் குறை அனைத்தும் தீரும். நிறைவான வாழ்வு அமையும்.