சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயிலுள்ள குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலூட்ட அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரைக் கையில் வாரி எடுத்த அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்ததும் இருவரும் மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரைக் கண்டு, ‘உனக்குப் பாலூட்டியது யார் ?’ என்று கோபித்தார். அப்போது சம்பந்தர், ‘தோடுடைய செவியன்....’ என்ற முதல் தேவாரப் பாடலைப் பாடத் தொடங்கினார். அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் சிவபார்வதி அப்போது காட்சியளித்தனர். அந்த பாக்கியத்தை நாமும் பெற இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். இன்று தரிசித்தால் வாழ்வில் செல்வ வளம், மனநிம்மதி உண்டாகும்.