பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
நாமக்கல்: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, நாமக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் விரதமி ருந்து, சபரிமலை செல்வதற்காக நேற்று 17ல், மாலை அணிந்தனர்.
சபரி மலை ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் பிறந்து விட்டால், கழுத்தில் மாலை அணிந்து விரதத்தை கடைபிடிப்பர். சிலர், 48 நாட்கள் விரதமிருந்து மகரஜோதி நாளில் சென்று, ஐயப் பனை தரிசிப்பர். பலர் ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் விரதமிருந்து சபரிமலை சென்று வருவர்.
அதன்படி நேற்று 17ல், கார்த்திகை மாதம் பிறந்ததால், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், மாலை அணிவிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். அதேபோல் முருகன், விநாயகர், சிவன் கோவில்களிலும் அதிகாலை புனித நீராடி வந்த பக்தர்கள், இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்கான மாலைகளை அணிந்து விரதம் துவக்கினர்.
காவி மற்றும் கறுப்பு வேட்டி, துண்டு, சட்டை அணிந்து ஐயப்ப சரண கோஷத்தை முழங்கி இறை வழிபாட்டை மேற்கொண்டனர். நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ப.வேலூர், பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை அணிந்து கொண்டனர்.