முருக பக்தரான வாரியார் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். எதிர்மறையான விஷயத்தைக் கூட நேர்மறையாக சிந்திப்பவர். ஒருநாள் சொற்பொழிவுக்காக செல்லும் போது,""திருநீறு இட்டார் கெட்டார்... திருநீறு இடாதார் வாழ்ந்தார்” என நாத்திகர் சிலர் சுவரில் எழுதியிருக்கக் கண்டார். ""சுவாமி... காலம் கெட்டுப் போச்சு; என்ன எழுதி இருக்கு பார்த்தீர்களா?” என்றார் உதவியாளர். ""இல்லை...சரியாகத் தான் இருக்கிறது” என வாரியார் மறுத்தார். ""சாமி...நீங்களுமா இப்படி சொல்கிறீர்கள்?” என்றார் அவர்.
""நன்றாக பதம் பிரித்து படித்து பார்” என்ற வாரியார் ""திருநீறு இட்டு யார் (இட்டு + யார் = இட்டார்) கெட்டார்” என்றும், அடுத்தது திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) வாழ்ந்தார் என்றும் விளக்கினார். முருகப்பெருமான் அளித்த அறிவுக்கொடையைத் தான் என்னவென்று சொல்வது?