குன்னூர் : குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் புடைசூழ விமரிசையாக நடந்தது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. தாசபளஞ்சிக சமூகத்தாரின் 59வது ஆண்டு உபயமாக நடந்த இந்நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு திருத்தேர் கலச பூஜையுடன் துவங்கியது. சந்தான வேணுகோபால் சுவாமி கோவில் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. நேற்று காலை 9.00 மணிக்கு வி.பி., தெருவில் உள்ள துருவம்மன் கோவிலில் மேளங்கள் முழங்க ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவிலுக்கு அனைவரும் வந்தனர். மதியம் 12.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அர்ஜூணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மதியம் 1.00 மணிக்கு விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணிக்கு தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், வீதி உலா வந்த அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 4.30 மணிக்கு டாக்சி ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் லியோனியின் சிறப்பு பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி நடந்தது. இரவு 8.00 மணிக்கு இன்னிசை கச்சேரி, தொடர்ந்து விண்ணை அதிரவைக்கும் வர்ணஜால வாண வேடிக்கை நடந்தது. விழாவையொட்டி, குன்னூர் நகர அ.தி.மு.க., மற்றும் மகளிர் குழுவினர் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.