தர்மத்தை நாம் காத்தால் தர்மம் நம்மை காக்கும்: சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2012 12:04
நாகர்கோவில் : தர்மத்தை நாம் காப்பாற்றினால் தர்மம் நம்மை காப்பாற்றும் என நாகர்கோவிலில் சிருங்கேரி பீடாதிபதி பாரதி தீர்த்த மகாசுவாமிகள் பேசினார். சிருங்கேரி பீடாதிபதி பாரதி தீர்த்த மகாசுவாமிகள் திருவனந்தபுரம் வழியாக குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு களியாக்காவிளை பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பள்ளதெரு ஸ்ரீசிருங்கேரிமடம் வளாகம் வந்தார். அங்கு அவருக்கு பூர்ணகும்ப வரவேற்பு, தூளிபாதபூஜை, நன்மடல் சமர்பணம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் அருளுரை வழங்கினார். அருளுரையில் கூறியதாவது: நாம் தர்மத்தை காப்பாற்றினால் நம்மை தர்மம் காப்பாற்றும். தர்மத்தை காப்பாற்றும் போது நமக்கு சுகம் கிடைக்கும். சுகம் கிடைக்க வேண்டுமானால் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். ஆனால் தர்மத்தின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தர்மம் என்ன என்று கேட்டால் நம் கடமை எதுவோ அதுதான் தர்மம். நாம் அப்பா அம்மாவுக்கு செய்யும் சேவை, கடமை. குருவுக்கு சிஷ்யர் செய்வது கடமை. ஆசிரியர் நல்ல பாடம் எடுப்பது அவரது கடமை. பொதுவாக எல்லோருக்கும் கடமை உள்ளது. யாருக்கும் ஹிம்சை செய்ய கூடாது. மற்றவர் மனதை பாதிக்கும் வகையில் பேசக்கூடாது. யாருக்கும் கெடுதல் நினைக்க கூடாது. இன்னொருவரின் பொருளை அபகரிக்க கூடாது. யார் மனதையும் புண்படுத்தக்கூடாது. இந்து தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாம் செய்த கர்மாவின் பலன் நமக்கு கிடைக்கும். கடந்த காலங்களில் மன்னர்கள் குறைவாக பேசுவார்கள். காரணம் என்னவெனில் அதிகமாக பேசினால் பொய் பேசவேண்டியது வரும் என கருதி குறைவாக பேசுவார்கள். அப்போதே பொய் பேசுவதே மிகப்பெரிய பாவமாக கருதப்பட்டது. முன்னோர்கள் கோயில்களை கட்டினார்கள். அந்த கோயில்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இருக்கும். லட்சக்கணக்கான மக்கள் பகவானின் அருளுக்கு பாத்திரமாவார்கள் என கருதி கோயிலை கட்டினார்கள். ஆனால் எல்லோருக்கும் கோயில் கட்ட முடியாது. அவரவர் சக்திக்கு ஏற்பத்தான் கோயில் கட்டினார்கள். நாம் சம்பாதித்த பணத்தை பிறருக்கு தானம் செய்ய வேண்டும். அல்லது தான் அனுபவிக்க வேண்டும். இல்லையெனில் திருடன் கொண்டு போய்விடுவான். அல்லது வரி கட்ட வேண்டும். தர்ம காரியத்துக்கு கொடுத்தால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அதுபோல் 10 மடங்கு நம்மிடமே வந்து சேரும். அதனால் நாம் தர்ம காரித்துக்கு செலவு செய்ய வேண்டும். சத்தியத்தை கூற வேண்டும். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. நியாயமான வழியில் கிடைக்கும் பணம் என்றும் நிலைக்கும். அநியாயமான வழியில் சம்பாதித்தால் அந்த பணம் போய்விடும். தர்மத்தின் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்படியென்றால்தான் வாழ்க்கையில் நாம் முன்னேற முடியும். வாழ்க்கை நன்றாக இருக்கும். தர்மம் செய்து நாம் உயர வேண்டும். இதற்காககத்தான் சங்கரர் அவதாரம் எடுத்தார். நான் இங்கு உங்களுக்கு ஆசி வழங்குகிறேன். அனைவரும் சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜையில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஸ்ரீ சாரதாசந்த்ரமவுலீஸ்வர பூஜை நடந்தது. பூஜை மற்றும் அருளுரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (19ம்தேதி) காலை பூஜை, ஜகத்குரு மகாசுவாமிகளின் தரிசனம், பழ,புஷ்பசமர்பணம், பாதபூஜைகள், தீர்த்தபிரசாதம், மந்த்ராக்ஷதை பிரசாதம் ஆகியன நடக்கிறது. கன்னியாகுமரிக்கு அழைப்பு அறநிலையத்துறை சார்பில் இணை கமிஷனர் ஞானசேகர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமிகளை சந்தித்தனர். அவர்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்கு வரவேண்டும் என சுவாமிக்கு அழைப்பு விடுத்தனர்.