பதிவு செய்த நாள்
18
டிச
2019
11:12
நாளை காலை திருப்பாவையின், 3ம் நாள் பாடலான, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி... என்ற பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை வழிபடுகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலையில், ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமானுஜர் பாதம் பட்ட, பெருமை மிக்க பூமியாக கருதப்படும் பாலமலையில், ரங்கநாதருக்கு கோவில் கட்ட பக்தர்கள் தவித்தபோது, பெரும் ஓசை கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்த போது, கோவில் கட்ட தேவையான கருங்கற்கள் ஆங்காங்கே உடைந்து கிடந்ததாகவும், செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி ஐந்து சனிக்கிழமையும், சிறப்பு பூஜைகள் நடக்கும்.
ராமநவமி மற்றும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தேர்திருவிழா நடக்கும். திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். இக்கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி... என தொடங்கும் திருப்பாவையின், 3ம் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். பாடலின் பொருள் இப்பாடலின் பொருள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி, பாவை நோன்பை மேற்கொண்டு, மார்கழி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்து நாடு செழிக்கும். அதன்வழி நீர்வளம் மிகுந்து, நெல்வளம் சிறந்து, பசு வளம் உருவாகி, பால் வளம் பெருகி காணப்படும் என்பதாகும்.