சபரிமலை ; சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக டிச.30- மாலை மீண்டும் நடை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் நேற்று மதியம் மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. கடந்த ஆண்டு சீசனை ஒப்பிடும் போது இந்த சீசன் சுமூகமாக இருந்தது.
டிச. 23,24,25 தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் வாகனங்கள் 12 முதல் 24 மணி நேரம் வரை வழிகளில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் திரும்பி செல்வதற்கு ரயிலில் டிக்கெட் எடுத்தவர்கள் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சபரிமலை வராமல் திரும்பிய சம்பவமும் நடந்தது.
வருமானம் 160 கோடியை தாண்டியது: நிறைவாக நேற்று மண்டலபூஜை நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் துவங்கியது. 9:30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டு கோயில் சுற்றுப்புறம் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு பிரம்மகலசத்தில் களபம் பூஜித்து நிறைத்த பின்னர் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி அதை எடுத்து கோயிலை வலம் வந்தார். பின் சுவாமிக்கு களப அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தந்திரி மண்டலபூஜை நடத்தி தீபாராதனை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.மாலை 4:00 மணிக்கு நடை திறந்து 6:30-க்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி மூன்று நாட்கள் மகரவிளக்கு பூஜைக்கான ஆயத்தங்கள் நடை பெறும். டிச.30- மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். ஜன.15-ல் மகரஜோதி விழா நடக்கிறது.