பதிவு செய்த நாள்
06
ஜன
2020
10:01
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷேகத்தை விழாவையொட்டி, 12 அடி உயரமுள்ள விமான கோபுர கலச திருப்பணி செய்ய இறக்கப்பட்டு, பணிகள் துவக்கியது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப். 5ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 216 அடி உயரத்தில், விமானத்தில் இருந்த கலசத்தை திருப்பணி செய்யவதற்காக, நேற்று காலை கீழே இறக்கும் பணி தொடங்கியது. இதற்கு முன்பாக இக்கலசத்தின் தன்மை குறித்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தின் கதிரியக்கப் பிரிவு இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக உலோகவியல் துறைப் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் குழுவினரும் ஆய்வு செய்தனர்.
அப்போது, கலசம் 12 அடி உயரமும், நான்கரை அடி அகலமும் இருப்பது தெரிய வந்தது. மேலும், செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இக்கலசத்தின் உள்ளே 8 மூட்டைகள் அளவுக்கு வரகு கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இக்கலசம் எட்டு பாகங்களாக இருந்தன. இதில், 3 பெரிய பாகங்களும், 5 சிறிய பாகங்களும் உள்ளன. இதையடுத்து, விநாயகர் பூஜை நடத்தப்பட்டு, பாகங்களை பிரித்து, 4 மணி நேரத்திற்கு பிறகு, மாலையில் கீழே கொண்டு வரப்பட்டது. இதை சுத்தம் செய்து, தங்க முலாம் பூசப்பட்டு, மீண்டும் பொருத்தப்படும் என, கும்பாபிஷேக விழா குழுத் தலைவர் திருஞானம் தெரிவித்தார். இதேபோல, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளின் உள்ள கலசங்களிலும் திருப்பணி செய்யப்பட உள்ளன.