பெருமாள் கோவில்களில் ராப்பத்து உற்சவம்
பதிவு செய்த நாள்
08
ஜன 2020 11:01
சேலம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பெருமாள் கோவில்களில், மச்சாவதாரத்துடன் ராப்பத்து உற்சவம் நேற்று துவங்கியது. சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு நேற்று முன்தினம் நடந்தது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான, நேற்று முன்தினம் பெருமாள் உபயநாச்சியார்களுடன் காட்சியளித்தார். இரண்டாம் நாளான நேற்று, மச்சாவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பட்டாச்சாரியார்கள், திருவாய்மொழி பாராயணம் செய்தனர். ராப்பத்து உற்சவத்தில் இன்று கூர்மாவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், ராமாவதாரம், பலராமாவதாரம், திருமங்கை மன்னன் வேடுபறி, கிருஷ்ணாவதாரம் என ஒவ்வொரு நாளும் பெருமாள் தசாவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 12ல் கூடாரவல்லி உற்சவத்தன்று, சவுந்தரராஜர் ஆண்டாள் நாச்சியாருடன் சேர்த்தி சேவையில் அருள்பாலிப்பார். 13ல், எட்டாம் திருநாள் என்ற திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடக்கவுள்ளது. 15ல், திருவாய்மொழி சாற்றுமுறை திருமஞ்சனம், ஆழ்வார் மோட்சத்துடன் ராப்பத்து உற்சவம் நிறைவு பெரும். இதே போல், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜர், உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவிலிலும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது.
|