ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துாரில் பொங்கலை முன்னிட்டு, கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களில் இளைஞர் சங்கங்களின் சார்பில், விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனை முன்னிட்டு மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், கதிர்பூஜையையும் ரகு மற்றும் ரமேஷ் பட்டர் செய்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் உட்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரின் பல்வேறு தெருக்களில் இளைஞர்கள் சங்கங்களின் சார்பில், பொங்கல் வைத்து, பல்வேறு தமிழ் கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர்: விருதுநகரில் நேற்று பொங்கலை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வாலசுப்பிரமணியர், பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலத்தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி உடனுறை சொக்க நாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.