பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
10:04
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்தனர். ஸ்ரீபெரும்புதூரில் புகழ்பெற்ற ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. ராமானுஜர் அவதார ஸ்தலம். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், ராமானுஜர் அவதார உற்சவம், 10 நாட்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, 10 நாட்கள், ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ராமானுஜர் அவதார உற்சவம், கடந்த 18ம் தேதி துவங்கியது. தினம் காலை மற்றும் மாலை, ராமானுஜர் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, நேற்று காலை, பிரபல உற்சவமான தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்: நேற்று காலை 5.30 மணிக்கு, ராமானுஜர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். காலை 7.20 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்களின் கரகோஷத்திற்கிடையே தேரோட்டம் துவங்கியது. பெரும்புதூர் எம்.எல்.ஏ., பெருமாள், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் பரிமளா குமார் உள்ளிட்டோர், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
பக்தர்கள் பரவசம்: ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவரும் பக்தி பரவசத்துடன், வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரடியிலிருந்து புறப்பட்ட தேர், காந்திரோடு, செட்டித்தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாகச் சென்று, பகல் 12.15 மணிக்கு நிலையைச் சென்றடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, ராமானுஜரை வழிபட்டனர். நேர்த்திக்கடனாக பலர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தேரோட்டத்தை யொட்டி, ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் கஜேந்திரகுமார் தலைமையில், மூன்று காவல் ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள் உட்பட, 90 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேரோட்டம் முழுமையாக கண்காணிக்கப்பட்டது.