வள்ளியூர்: வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா நாளை (29ம் தேதி) நடக்கிறது. வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் சித்திரை மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா ஒன்றாகும். 10 நாட்கள் நடக்கும் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஏக சிம்மாசனத்தில் சுவாமி எழுந்தருளல், மதியம் கும்பாபிஷேக சிறப்பு தீபாராதனை பூஜை, இரவில் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (29ம் தேதி) 9ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. காலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு உற்சவ சுவாமி தேரில் எழுந்தருளிய பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு பல்லக்கில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அன்னகொடி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.