பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
சேலம்: ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், குகை, மாரியம்மன் கோவில் பிரதான சாலையிலுள்ள, பெரிய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல், விக்னஷே்வர, கோமாதா, நவக்கிரக, லட்சுமி குபேர பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலையில், நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, கலசங்கள் புறப்பாடு, கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிராம்ஹி, கவுமாரி, வைஷ்ணவி, நந்திவாகனம், பலி பீடம், சித்தி விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்களை தொடர்ந்து, பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பெரியநாயகி அம்மன் டிரஸ்ட் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று முதல், 48 நாள் மண்டல பூஜை நடக்கிறது.
செல்வ மாரியம்மனுக்கு...: ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி, செல்வ மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நிறைவடைந்து, அதில் வைத்திருந்த புனிதநீர் கலசங்களை, எடுத்து சிவாச்சாரியார்கள், கோவிலை சுற்றி வலம் வந்தனர். முதலில் கருவறை கோபுர கலசத்துக்கு ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, திரண்டிருந்த பக்தர்கள், ஓம்சக்தி பராசக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சிவன், துர்க்கை பரிவார தெய்வங்கள், மூலவர் செல்வ மாரியம்மன் சிலைகளுக்கு, புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் செல்லியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. மாலை, புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடந்தது. உற்சவ மூர்த்திகளான செல்லியம்மன், மாரியம்மன், பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மேலும், சித்தர்கோவில் அருகே, ஆரியகவுண்டம்பட்டி அய்யனாரப்பன்; கொங்கணாபுரம் அருகே, வெள்ளக்கல்பட்டி, விநாயகர், பாலதண்டாயுதபாணி; சங்ககிரி, அரசிராமணி, செட்டிப்பட்டியிலுள்ள மாரியம்மன்; ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் கோவில் வளாக அறுபடை பாலசுப்ரமணியர் கோவில்களிலும், கும்பாபிஷேகம் நடந்தது.