பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
சென்னை: நாகூர் தர்காவில் நடக்கும் கந்துாரி விழாவில் பங்கேற்பதற்கு வசதியாக, சுற்றுலாத் துறை சார்பில், இரண்டு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நாகை மாவட்டம், நாகூரில் உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இங்கு, நாகூர் ஆண்டவர் மறைந்த தினம் ஆண்டுதோறும், கந்துாரி விழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கந்துாரி விழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நடக்க உள்ளது.நாகையில் இருந்து சந்தனக்கூடு புறப்பட்டு, 5ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, தர்காவை வந்தடைகிறது.
அதைத் தொடர்ந்து பாத்தியா ஓதி, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படுகிறது.அனைத்து மதத்தினரும் வழிபடும், நாகூர் தர்காவில் நடைபெறும் கந்துாரி விழாவிற்கு, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமையகத்தில் இருந்து, 4ம் தேதி காலை, 7:00 மணிக்கு குளிர்சாதன சொகுசு பஸ் இயக்கப்பட்டு, 6ம் தேதி காலை சென்னை வந்தடையும்.செல்லும் வழியில், பிச்சாவரம் காண்பதற்கும், திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலா கட்டணமாக பெரியவர்களுக்கு, இருவர் தங்கும் அறை, 3,000 ரூபாய், தனி நபருக்கு, 3,400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.சுற்றலா செல்ல விரும்புவோர், www.ttdconline.com என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் முன்பதிவிற்கு, www.mttdonline.com என்ற முகவரியிலும் முன்பதிவு செய்யலாம்.மேலும், விபரங்களுக்கு 044- 2533 3333, 2533 3444, 2533 3850 - -54 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.