பதிவு செய்த நாள்
31
ஜன
2020
01:01
சென்னை: ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று, கங்கா, பூமி வந்தனம் நடந்தது. இதில், ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 11வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, 29ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.இந்தாண்டு, பெண்மையைப் போற்றுதல் எனும் தலைப்பில், கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.வனம், வன விலங்குகளை பாதுகாத்தல்; சுற்றுச்சூழலை பராமரித்தல்; ஜீவராசிகளை பேணுதல்; பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல்; பெண்மையை போற்றுதல்; நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய கருத்துக்களின் அடிப்படையில், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில், 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.இரண்டாம் நாளான நேற்று, சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தின் அடிப்படையில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நேற்றைய முதல் நிகழ்வாக, கங்கா, பூமி வந்தனம் ஆகிய பண்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவியர், பாரம்பரிய உடையுடன், பூமி தாய்க்கும், கங்கா தேவிக்கும் பூஜைகள் செய்தனர்.இதையடுத்து, பூமியையும், தண்ணீரையும் பாதுகாப்பது தொடர்பாக, கான, நாட்டிய, நாடகங்கள் நடத்தப்பட்டன.பின், தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு, மலையாள கவுண்டர் சமுதாயத்தின் கலாசார நிகழ்வு நடந்தது.மாலை, 6:15 மணிக்கு, கேரள உடையில், ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவாதிரா, காளி, மோகினி நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.