பதிவு செய்த நாள்
02
பிப்
2020
08:02
திருவாரூர் :ஞானபுரி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், 7ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, நேற்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, குரு தலம் அருகே, திருவோணமங்கலம் ஞானபுரி சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், திருப்பணி முடிந்து, வரும், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோவிலில் நடைபெறும் உற்சவத்தின்போது, சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், வீதி உலா செல்வதற்கும், பஞ்சலோகத்தாலான ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் பவ்ய ஆஞ்சநேயர் விக்கிரகங்கள், தஞ்சை மாவட்டம், சுவாமி மலை அடுத்த மாங்குடி செல்வம் ஸ்தபதியால் செய்யப்பட்டன. அனைத்து சுவாமி திருமேனிகளும், நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. திருமேனி களுக்கு, கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமி கள் சிறப்பு பூஜை நடத்தினார். கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா உட்பட பலர் பங்கேற்றனர். மகா கும்பாபிஷேகத்தன்று மாலை, ஆஞ்சநேயருக்கு, 2,000 கிலோ மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 8ம் தேதி, ஒரு லட்சம் வடை மாலை சாற்றப்படுகிறது.