பதிவு செய்த நாள்
02
பிப்
2020
08:02
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும், தஞ்சை தரணியில், வானளாவ வளர்ந்து,
அகிலத்தை அண்ணாந்து பார்க்க வைப்பது, தஞ்சை பெரிய கோவில். இதை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, யுனஸ்கோ அங்கீகரித்து, பழந்தமிழர் கலையை பெருமைப்படுத்தி உள்ளது. இக்கோவிலை, சிறப்பாகப் போற்றி, பாதுகாத்து, பராமரித்து வருகிறது, மத்திய தொல்லியல் துறை. இதற்கு, தஞ்சை பெரிய கோவில்; தஞ்சை பெருவுடையார் கோவில்; பிரகதீசுவரர் கோவில்; ராஜராஜேஸ்வரம் என, பல பெயர்கள் உண்டு. அதைப் போலவே, இதைக் கட்டிய அருண்மொழி வர்மனுக்கும், ராஜராஜன், மும்முடி சோழன், சிவபாத சேகரன், திருமுறை கண்டசோழன் என, பல பட்டப் பெயர்கள் உண்டு.
கலைத்திறன்: தமிழக வரலாற்றில், இல்லை... இல்லை... தென்னிந்திய வரலாற்றில், பொற்காலம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது, ராஜராஜனின் ஆட்சி காலத்தை தான். உலகை வெற்றி பெறுவதிலும், கலைகளை வளர்ப்பதிலும், நிர்வாக திறமையிலும், நாட்டு மக்களை மேம்படுத்துவதிலும், ராஜாதி ராஜனாகவே விளங்கியுள்ளான், ராஜராஜன். அவன் காலத்தில், கட்டட கலை, சிற்பக்கலை, செப்புத் திருமேனி வடிக்கும் கலை, வார்ப்புக்கலை, கல்வெட்டுகள், ஓவியங்கள் என, அனைத்துக்கும் சிறப்பிடம் தான். அவற்றுக்கு, சமீபத்திய சாட்சியாக விளங்குவதும், பெரிய கோவில் தான்.ராஜராஜன் கட்டியது, ராஜராஜீஸ்வருமுடையார் கோவில். அதிலுள்ள, பெரியநாயகிஎன்ற, அம்மன் சன்னிதியை அமைத்தவர்கள் பாண்டியர்கள்.கோவில் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் வீற்றிருக்கும் சுப்பிரமணியர் சன்னிதி,நாயக்கர் காலத்தை சேர்ந்தது. தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள பிள்ளையார் சன்னிதி, மராட்டியர் காலத்தைச் சேர்ந்தது. கோவில் கட்டுமானங்களில் மட்டு மல்ல, அங்குள்ள ஓவியங்களிலும், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் கலைத்திறன் வெளிப்பட்டுள்ளது.
கல்வெட்டு சொல்வதென்ன?: அழகிய எழுத்துருக்களில் வடிக்கப்பட்டுள்ள இக்கோவில் கல்வெட்டுகளில், கோவில் நிர்வாகம் மற்றும், கோவிலுக்கு எந்தெந்த வடிவில் செப்புத்திரு மேனிகள் அளிக்கப்பட்டன; அவற்றுக்கு எந்தெந்த அளவுகளில், எந்தெந்த எடைகளில், எத்தனை நகைகள் அணிவிக்கப்பட்டன என்ற விபரங்கள் துல்லியமாக குறிப்பிடப் பட்டுள்ளன. கல்வெட்டுகள் என்றதும், கற்கள் நினைவுக்கு வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலின், கோபுர வாயிலில் உள்ள நிலைக்கால், துவாரபாலகர் போன்றவை பெருங்கற்களால் ஆனவை. மலை இல்லாத தேசத்தில், எங்கிருந்து வந்தன, இவ்வளவு பெரிய கற்கள் என்ற கேள்வி எழுகிறது. என்றாலும், தஞ்சைக்கு அருகிலுள்ள, மலைகள் நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டையில் இருந்து வந்திருக்கலாம் என்பர். அதை உறுதிப்படுத்தும் வகையில், தஞ்சைக்கு அருகிலுள்ள உடையார்கோயில் கல்வெட்டில், கற்கள் நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து வந்ததாக குறிப்பு உள்ளது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தின், தற்போதைய குன்றாண்டார் கோவில் பகுதி தான், அந்த கல்வெட்டு சுட்டும் இடம்.
சிற்பிகள்: ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், காணும் விழிகளில் ஆச்சரியக்குறி விழ வைக்கும், அழகிய கலையின் அற்புத காட்சியாய் விரியும் பெரிய கோவில், இன்னும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து, தமிழரின் பெருமை சொல்லும். சரி, இதை எழிலுறச் செதுக்கிய சிற்பிகள் எவராக இருப்பர் என்ற கேள்வி, எல்லோருக்குள்ளும் எழும். அதற்கும், விடை சொல்கின்றன, கல்வெட்டுகள்.
ஆம், வீரசோழன் குஞ்சர மல்லனான, இராஜராஜ பெருந்தச்சன், குணவன் மதுராந்தகனான
நித்தவினோத பெருந்தச்சன், இலத்திச் சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் என்ற
சிற்பிகளின் பெயர்களை,கல்வெட்டுகள் சொல்கின்றன.பிருகன் நாயகி எனப்படும், உலகம்
முழுவதும் உடைய நாச்சியார் சன்னிதியின் அதிட்டானத்தில் காணப்படும் கல்வெட்டில்,
தஞ்சாவூர் பெரிய உடைய நாயனார் கோவில், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம், புலியூரார் தன்மாகக் கல்லு வருகையினாலும் என்ற குறிப்பு காணப்படுகிறது.
எனவே, மல்லப்ப, மூர்த்தி அம்மன் மண்டபங்களை உருவாக்கியவர்கள் புலியூர் என்ற ஊரை சேர்ந்தவர்கள் என்பதும், தங்களின் கொடையாக, கருங்கற்களைக் எடுத்து வந்து கட்டினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.பிரகாரத்தின் வடமேற்கு மூலையில், அழகிய
சிற்பங்களுடன் உள்ள, சுப்பிரமணியர் கோவிலை கட்டியது யார் என்ற கேள்விக்கு, மகாமண்டபத்தின் துவாரபாலகர் அருகில் உள்ள கல்வெட்டு பதில் சொல்கிறது.
அதில், ரவுத்திரி வருஷம், பங்குனி மாதம், 16, அதிர வீசி ஆச்சாரி வீராய்ய நாயக்கர் சதா சேவை என, குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, இக்கோவிலை கட்டிய சிற்பியின் பெயர் தான், இந்த அதிர வீசி ஆச்சாரி என்பதை அறிகிறோம்.கோவிலில், சிற்பங்களை வைக்கும்
முன், அதற்கேற்ப கற்களை வைத்து, அளவிட்டு பின், சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியாக, இக்கோவிலில் தேவகோட்ட சிற்பங்களுக்கு அருகில், கருவறைக்கு மேல்பகுதியில் உள்ள, ஆடவல்லானின் கரண சிற்பத் தொகுதியில், சிற்பம் வடிப்பதற்கு ஏற்ப கற்கள் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அடடா... என்னென்ன சிற்பங்கள், எந்தெந்த இடத்தில், எந்தெந்த அளவில் இடம் பெற வேண்டும்; அவற்றுக்கு எந்த அளவில் கற்கள் வேண்டும் என்பதை, ஆய்ந்தறிந்து செயல்பட்ட சிற்பிகளை எவ்வளவு பாராட்டினாலும், வார்த்தை பஞ்சம் தான் ஏற்படுகிறது.
கண்டுபிடித்த ஹூல்ஸ்
சோழருக்குப் பின் வந்த அரசுகளின் நிலையற்ற தன்மையாலும், குழப்பங்களாலும், மக்கள், வரலாற்றை மறந்து போயினர். தஞ்சை பெரிய கோவிலை கட்டியது பற்றி, பல கதைகள் இருந்தன. இந்த நிலையில் தான், ஜெர்மன் நாட்டு அறிஞர் டாக்டர் ஈகர் ஜூலியஸ் தியோடர் ஹூல்ஸ் என்பர், கருவறையின் வடக்குப்புற, அதிட்டானப் பகுதியில் இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தார்.
அந்த கல்வெட்டில், நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை, முதன்முதலில் படித்து, பெரிய கோவிலை கட்டியது, ராஜராஜன் என, வரலாற்றுக்கு மீள் தகவலை தந்தார். அந்த தகவலை பதிப்பித்தவர், அறிஞர் வெங்கையா. இப்படித்தான், ராஜராஜ சோழனின்புகழ் மீண்டும் ஒளி வீசத் தொடங்கியது.
அறிஞர் ஹூல்சை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய தொல்லியல் துறை, சென்னை,- செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கல்வெட்டு அருங்காட்சியம் அமைத்துள்ளது போற்றுதலுக்குஉரியது.சரி... அந்த காலத்திலேயே, அழகான எழுத்துக்களில் கல்வெட்டுகளை வடித்தவர்
யார் என்ற கேள்விக்கும், கல்வெட்டுகளே விடை சொல்கின்றன. ஆம், கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
சிற்பங்களுக்கும், செப்புத் திருமேனிகளுக்கும் இணையான புகழுடையவை, பெரிய கோவிலில் உள்ள ஓவியங்கள். இங்கு, சோழர் ஓவியங்கள், அதன் மேல் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. நாயக்கர் கால ஓவியங்களை தீட்டியவர் பற்றி, அப்பல பெத்தராய ராமய்யா
வரைந்தது என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோழர் கால ஓவியங்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர், அண்ணாமலை பல்கலை பேராசிரியரான கோவிந்தசாமி. அந்த ஓவியங்களை வேதியியல் முறையில் பாதுகாத்தவர்
பரமசிவம் என்பவர்.இப்படியாக, பெரிய கோவிலை பற்றி பேசினால், பேசிக்கொண்டே
இருக்கலாம். பார்த்தால், பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது, பெரிய்ய கோவில் இல்லையா!
அந்த பெரிய கோவிலுக்கு, வரும், 5ல், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. கோவில் உருவாக்கத்தில், தங்களை பக்தியுடன் அர்ப்பணித்த, அத்தனை பேரின்
பெருமையையும் போற்றி புகழ்வோம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, தமிழனின்
வீரத்தையும், பக்தியையும், கலை நேர்த்தியையும் பிரதிபலிக்கும் வரலாற்றுக் களஞ்சியமான தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்க என, வாழ்த்துவோம்.நம் சந்ததியினரும், அதன் பெருமையை பேச, அதை போற்றி பாதுகாப்போம்!
கி.ஸ்ரீதரன்,
முன்னாள் துணை கண்காணிப்பாளர்,