ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அம்மன் முகப்பு மண்டபத்தில் ஆகம விதிகளை மீறும் வகையில் செருப்புகளை அகற்றாததற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செருப்புடன் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் செருப்புகளை கோயில் கிழக்கு வாசல் முன்புள்ள பாதுகாப்பு அறையில் வைத்து செல்லலாம். ஆனால் சிலர் கோயில் சுவாமி, அம்மன் முகப்பு மண்டபத்தில் செருப்புகளை விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் முகப்பு மண்டபத்தில் தனியார் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பலரும் முகப்பு மண்டபத்திற்குள் செருப்புகளை விட்டு சென்றனர். இதனை கண்ட பக்தர்கள் முகம் சுளித்தபடி சென்றனர். ஆகம விதி மீறி மண்டபத்திற்குள் விடப்பட்ட செருப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்த கோயில் ஊழியர்களுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்