ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலின் வரலாற்றை கூறும் வியப்பூட்டும் பழமையான நான்கு துாண்கள் இருப்பதாகவும், இந்த துாண்களை பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தால் அக்கால மக்களின் கலை நுணுக்கத்தை அறிய உதவும், என தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:கி.பி. 1780க்கு முன்பு உத்தரகோசமங்கை கோயிலின் கிழக்கு பகுதியில் இரண்டாவது எழுநிலை கோபுரத்திற்கும், அக்கோயிலின் வடக்கு தெற்கு, மேற்கு நுழைவு வாயில்களில் ராஜ கோபுரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கு கோபுரம் அமைப்பதற்கான நான்கு பிரம்மாண்டமான ஒரே கல்லால் ஆன கல் துாண்கள் நடப்பட்டுள்ளன. இந்த துண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஒன்றைப் போலவே மற்றொன்றும் சிறிதளவும் மாற்றம் இல்லாமல் உள்ளது. இக்கல் துண்கள் கடல் சிப்பிகளுடன் கூடிய மணற்பாறையால் ஆனவை. துாண்கள் ஒவ்வொன்றும் 55 டன் எடையுடன் 35 அடி உயரம் கொண்டது.இக்கற்களை வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து வெட்டி எடுத்திருக்கலாம். 230 ஆண்டுகளுக்கு முன் எவ்வித போக்குவரத்து வசதியும் மேம்படாத காலத்தில் இக்கற்கள் இங்கு எப்படி வந்தது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.இத்துாண்கள் யாருடைய பார்வையில் படாமலும், பராமரிப்பு இல்லாமலும் கோயிலின் மேற்கு பகுதியில் மாட்டு தொழுவமாக உள்ளது. சேதுபதிகளின் வரலாற்றையும் கலை சிறப்பையும் கூறும் தொன்மையான இந்த துண்களை பாதுகாத்து மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தால் அக்கால மக்களின் கலை நுணுக்கத்தை அறியலாம், என்றார்.