பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
ஈரோடு : மாநிலம் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படும் கோவில்களில், அன்னதானத்துக்காக பக்தர்கள் வழங்கும் நன்கொடை தொகையை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியாற, 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, அன்னதான திட்டம் கொண்டு வரப்பட்டது.
400 கோயில்கள்: மாநிலம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், 400க்கும் மேற்பட்ட கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. நன்கொடையாளர்களிடம் இருந்தும், கோவில் உண்டியல் வசூல் மூலமும் கணிசமான தொகை பெறப்பட்டு, அதன் மூலம் அன்னதானத் திட்டம் நடந்தது. மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் நன்கொடையாளர்களும், போதிய உண்டியல் வசூல் இல்லாமல் அன்னதானத் திட்டத்தை தொடர முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன், "விசேஷ நாட்களில் வடை, பாயசத்துடனும், டேபிள், சேரில் உட்கார வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட வேண்டும் என, அரசு பிறப்பித்த உத்தரவு, கோவில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.
வசூல்: ஒரு நாள் அன்னதானம் வழங்க, நன்கொடையாளர்களிடம், 1,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும், 15 ஆயிரம் ரூபாய் நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தினால், ஆண்டுதோறும், நன்கொடையாளர் விரும்பும் ஏதேனும் ஒரு தினத்தில், அவர்களது பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது. விலைவாசி உயர்வால் ஒரு நாள் நன்கொடையை, 2,000 ரூபாயாகவும், வைப்புத் தொகையை, 20 ஆயிரம் ரூபாயாகவும் அரசு உயர்த்தியுள்ளது. இதனால், பக்தர்கள் நன்கொடை செலுத்துவதில் ஆர்வம் குறையும் அபாயம் உள்ளது. இதனால், பல கோவில்களில் அன்னதானத்தை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்ற கவலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளனர்.