பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
துறையூர்: துறையூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து படர்ந்து நேற்று (29ம்தேதி) வழிபாடு நடந்தது. சூரிய வழிபாடு இன்றும் (30ம்தேதி) நாளை (மே1ம் தேதியும்) தொடர்கிறது.திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரை கீழ்புறம் சக்திவாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை துறையூரை ஆட்சி செய்த ஜமீன்தார்கள் கட்டி பூஜித்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பூஜைகள் தொடர்ந்து நடத்திட, நிலங்களையும் எழுதி வைத்துள்ளனர். கோவிலில் நிரந்தர அர்ச்சகர் இல்லாததாலும், பராமரிக்கப்படாததாலும் பூஜைகள் நடைபெறாமலும் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.தற்போது சிவபக்தர்களும், அடியார்களும் சேர்ந்து கோவிலை சுத்தம் செய்து, ஒரு அர்ச்சகரை நியமித்து, உபயதாரர்களைக் கொண்டு பூஜைகள் நடத்துவதால், கணிசமான பக்தர்கள் வந்து காசி விஸ்வநாதரை தரிசித்து செல்கின்றனர்.கோவிலுக்கு நிரந்தர அர்ச்சகர் நியமித்து விழா, விசேஷம், பூஜைகள் தொடர்ந்து நடத்திட இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்னளர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 17,18,19 ஆகிய மூன்று நாளும் சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து பூஜிப்பதும், ஸ்ரீசக்கரம் பொருத்தப்பட்டதும் சிறப்பாகும். சித்திரை 17ம் தேதியான நேற்று (29ம் தேதி) காலை ஆறு மணிக்கு இக்கோவிலின் மூலவர் காசி விஸ்வநாதர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து பூஜித்த அரிய நிகழ்வு நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். இந்நிகழ்வு இன்றும் (30ம்தேதியும்), நாளையும் (மே1ம்தேதியும்) நடக்கும் என்பதால், இருநாட்களும் சூரிய வழிபாடு பூஜையும் தொடர்ந்து நடக்கிறது.