அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு போயம்பாளையம் சக்தி நகரில் ஆண்டுதோறும் பொதுமக்கள் சார்பில், தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
27 ஆம் ஆண்டு தைப்பூச விழா கடந்த 20 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் மாலையில் முருகன் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் வீதிக்கு வந்து நிலாச்சோறு சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில், விழாவின் நிறைவு நாளான தைப்பூசத்தன்று முருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது இதில் சுற்றி உள்ள அனைத்து பொது மக்களும் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள், பாட்டு பாடி, கும்மி அடித்தனர். தொடர்ந்து, பக்தர்கள் தரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.