பதிவு செய்த நாள்
09
பிப்
2020
03:02
பல்லடம்: பல்லடம் அருகே, ஊர்மக்கள் ஒன்றுகூடி, முருகனுக்கு படையல் வைத்து, தைப்பூச விழாவை கொண்டாடினர்.
முருகன் கோவில்களில், தைப்பூச விழா, நேற்று முன்தினம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி ஏந்தியும், பாதயாத்திரை சென்றும், முருகனை வழிபட்டனர். பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த பொது மக்கள், வித்தியாசமான முறையில், தைப்பூச விழாவை, 9ம் ஆண்டாக கொண்டாடினர். அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் தைப்பூச விழாவை எங்கள் பகுதியிலேயே கொண்டாடி வருகிறோம். விழாவை முன்னிட்டு, அன்று இரவு, ஊர் மக்கள் அனைவரும், அவரவர் வீட்டிலிருந்து அரிசி, தேங்காய், பழம், பூ உட்பட பூஜை பொருட்கள் அனைத்தையும் கொண்டு வருவோம். வீதியை சுத்தம் செய்து, கோலத்திலேயே முருகனின் ரதம் வரைந்து, அதை சுற்றிலும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, படையல் வைத்து முருகனை வழிபடுவோம். பின், குழந்தைகள் அனைவரும், பாடல்கள் பாடியபடி, ரதத்தை சுற்றி வந்து வழிபடுவர். அரிசி, பருப்பு, காய்கறிகள் என, அனைவரும் எடுத்து வந்த பொருட்களை வைத்து, உணவு சமைத்து, பகிர்ந்து சாப்பிடுவோம். தொடர்ந்து, 9 ஆண்டுகளாக, இந்த வழிபாட்டு முறையை கடைபிடித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.