பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
சென்னை;முருகன் கோவில்களில், தைபூசம் திருவிழா கோலாகலமாக நடந்தது. வடபழனி ஆண்டவர் கோவிலில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
பூசம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியான நேற்று, பெரும்பாலான முருகன் கோவில்களில், தைபூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதிகாலை, மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால், பன்னீர், புஷ்பக் காவடி எடுத்தும், பலர் மொட்டை போட்டும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏரளமான பக்தர்கள், கோவில் முகப்பில் அன்னதானம் செய்தனர். சில கோவில்களில் தங்கரத புறப்பாடு நடந்தது.வடபழநி ஆண்டவர் கோவிலில், தை பூசத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.காலை, 11:30 மணிக்கு, உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 5,000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்து வந்தனர்; 1,500 பேர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதியம், 1:30 மணி முதல் மாலை, 4:00 மணிவரை முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, சாய ரக் ஷை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் வடபழநி ஆண்டவர் வீதி உலா நடந்தது.நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வடபழநி ஆண்டவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும், விபூதி, புஷ்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது.பொங்கல், தயிர்சாதம், தேங்காய் சாதம் போன்ற பிரசாதங்களும், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. கந்தக்கோட்டம், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன், பாம்பன்சுவாமிகள், மயிலை கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், தைப்பூச விழா விமரிசையாக நடத்தப்பட்டது.