கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு ஊராட்சி ஈளாடா முத்துமாரியம்மன் கோவில் பூகுண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை தொடர்ந்து, 27ம் தேதி அம்மன் காப்பு கட்டுதல், விநாயகர் பூஜை, நாகசக்தி பூஜையும், இரவு 9.00 மணிக்கு கங்கையில் இருந்து கரகம் எடுத்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி காலை 10.00 மணிமுதல் அம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை 6.00 மணிக்கு பூ குண்டத்திற்கு தீ மூட்டுதல், காலை 9.00 மணிக்கு கங்கையில் இருந்து பரவகாவடி அலகு பூட்டி காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.00 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பகல் 1.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7.00 மணிக்கு அம்மன் தேர் பவனியும் நடக்கிறது. நாளை காலை 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 2ம் தேதி காலை 10.00 மணிக்கு முனீஸ்வரர் ஆலயத்தில் பூஜைகள் நடக்கின்றன. 4ம் தேதி முத்துமாரியம்மன் கோவிலில் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.