திருப்பரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தனி பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது.
குன்றத்தில் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் மலையை சுற்றி 3 கி.மீ., தார், சிமென்ட் ரோட்டில் கிரிவலம் செல்கின்றனர். பழுதடைந்த இந்த ரோட்டில் வாகன போக்கு வரத்தும் உள்ளதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே தனி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவுபடி, முடிகாணிக்கை கொடுக்கும் இடம் முதல் நிலையூர் பிரிவு ரோடு வரை 2 கி.மீ.,க்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல பேவர் பிளாக் கற்கள் பதித்த தனி பாதை அமைக்கும் பணி நடக்கிறது. மதுரை சித்திரை வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்களை இங்கு பதிக்கின்றனர். பணிகளை உதவி பொறியாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.