பதிவு செய்த நாள்
17
பிப்
2020
05:02
மெக்காவிலிருந்து மெதினாவுக்கு எந்த முஸ்லிமும் செல்லக் கூடாது. மெதினாவிலிருந்து மெக்காவுக்கு வரும் எந்த முஸ்லிமையும் தடுப்பது கூடாது என நபிகளுக்கும், மெக்காவின் குரைஷிகளுக்கும் ‘ஹூதைபியா’ என்னுமிடத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது.
இந்த சமயத்தில் மெக்காவிலிருந்து அபுஜந்தல் என்னும் இளைஞர், தன் உடல் முழுவதும் காயங்களுடன் வந்தார்.
“குரைஷிகள் செய்யும் கொடுமைகளை இனியும் சகிக்க முடியாது. எனக்கு விடுதலையளித்து மெதினாவுக்கே அனுப்பி வையுங்கள்” என மன்றாடினார். இதைக் கேட்டு நாயகம் கண் கலங்கினார். எனினும் அபுஜந்தலை மெக்காவுக்கே திரும்பிச் செல்லும்படி வேண்டினார். இதையறிந்த தோழர்கள் கொதித்தனர்.
“இவ்வளவு துன்பங்களை அனுபவித்த பிறகும், இவரை மெக்காவுக்கே போகும்படி கட்டளையிடுகிறீர்களே....ஏன்” என கேட்டார்கள்.
‘‘நாம் ஏற்கனவே உடன்படிக்கை செய்து விட்டோம். எத்தனை சோதனை குறுக்கிட்டாலும் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது. அதை நிலை நாட்டுவதில் தான் பெருமை இருக்கிறது” என்றார். தோழர்களும் சம்மதித்தனர்.
அபுஜந்தல் மீண்டும் மக்காவுக்கே பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
எந்த நிலையிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முயற்சியெடுங்கள்.