பதிவு செய்த நாள்
24
பிப்
2020
12:02
திருப்போரூர், : திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவில் நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது. சிறப்பு வழிபாடுஇங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான, மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நித்ய நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி உள்ளிட்ட விசஷே நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்நிலையல், இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும், 28ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, தினமும், கந்தசுவாமி பெருமாள், வெவ்வேறு வாகனங்களில், வீதி உலா வருகிறார்.பிரதான தேர் திருவிழா, மார்ச், 5; தெப்போற்சவம், 8; திருக்கல்யாண உற்சவம், 11ம் தேதி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.இந்நிலையில், கோவில் விழாவால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, முன்னேற்பாடு பணிகளை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெரிசல் ஏற்படாது: இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:பிரம்மோற்சவத்திற்காக, தெற்கு மாடவீதி அருகே, பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அந்த இடத்தை, இருசக்கர வாகனத்திற்காக மட்டும் ஒதுக்கினால் மாடவீதிகளில் நெரிசல் ஏற்படாது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த, நெம்மேலி சாலை, மீன் மார்க்கெட் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள காலியிடத்தை ஒதுக்கலாம்.கடந்த, 2013ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின், கோவிலுக்கு வண்ணம் தீட்டவில்லை. மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி, வண்ணம் தீட்டி பொலிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் அருகே பக்தர்களுக்கு கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மூலவரை அருகில் தரிசிக்க அனுமதிக்க கோரிக்கை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அர்த்த மண்டபத்தில் நின்று, மூலவரை தரிசிக்கும் வாய்ப்பு, பல ஆண்டுகளாக இருந்தது.கடந்த, 2014, ஜனவரி மாதத்தில், பெண் ஒருவர், சுவாமியை தொட்டு கும்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மூலவரை அருகே தரிசிக்கும் சிறப்பு தரிசனத்திற்கு, தற்போது வரை தடை உள்ளது.எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தி, மீண்டும், அர்த்த மண்டபத்தில் மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்து கின்றனர்.