பதிவு செய்த நாள்
26
பிப்
2020
11:02
கோவை: கோவையில், 27 வயது பெண் துறவறம் பூண்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த, பிரவீன்குமார் ரங்கா, கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். இருவருக்கு, திருமணம் நடந்த நிலையில், மூன்றாவது மகள், நேஹால் குமாரி, 27, துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார்.அதற்கு, குடும்பத்தினர் அனுமதி வழங்கினார். நேஹால் குமாரி, துறவறம் பூண்ட நிகழ்ச்சி, கோவை பூ மார்க்கெட்டில் உள்ள, முனீஸ்வராத் ஜெயின் கோவிலில் நேற்று நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், மேட்டுப்பாளையம் ரோடு, டி.பி.ரோடு வழியாக சென்றது. துறவறம் மேற்கொண்டு, ஊர்வலமாக வந்த நேஹால் குமாரி, வழியில் நின்றிருந்த ஏழைகளுக்கு ஆடை, ஆபரணங்களை வழங்கினர். இன்று, சென்னைக்கு வரும் இவர், இங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜாலுார் மாவட்டம், அகோர் கிராமத்தில் உள்ள, ஜெயின் துறவ மடத்துக்கு சென்று, இறைசேவையில் ஈடுபட உள்ளார்.