திருப்புவனம்: திருப்புவனம் அருகே பழையனுாரில் சுந்தரமகாலிங்கம் உடனாய அங்காளஈஸ்வரி கோயில் மாசிக் களரி உற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பழையனுார் சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்ற கோயில், இங்கு ஆண்டுதோறும் மாசி சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி கோயிலிருந்து புறப்பட்டு மந்தையம்மன் கோயில், மேலத் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேரடிக்கு எழுந்தருளினர். 4 மணிக்கு புறப்பட்ட தேர், தேரடி வீதி வழியாக வலம் வந்தது.