பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
வீரபாண்டி: காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் அருகே, ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த, 26ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு திருமணிமுத்தாற்று கரையில் இருந்து துவங்கிய, தீர்த்தக்குட ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்டவர்கள் புனிதநீரை குடங்களில் ஏந்தியபடி கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பச்சை மாவு மற்றும் கூழ் படைத்தல் நிகழ்ச்சி, மாலையில் உருளுதண்டம், அக்னி கரக ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றுவர். 8:00 மணிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தலும், இரவு சத்தாபரண ஊர்வலமும் நடக்கிறது. மார்ச், 10ல் மறுபூஜையுடன் மாசித்திருவிழா நிறைவு பெறும்.