பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்தில் ஊழல் நடந்ததாக, வந்த புகாரின்படி, வேலூர், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நேற்று கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், மற்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம், புரோக்கர்கள் பணம் பறிப்பதாகவும், சில ஊழியர்கள், சில குருக்கள், தங்களுக்கு வேண்டியவர்களிடம், பணம் பெற்று கொண்டு, சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாகவும், சென்னை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதன்படி நேற்று, வேலூர் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், கோவிலின் தூய்மை, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுப்பும் முறை, ஊழியர்கள் எங்கெங்கு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என, விசாரணை நடத்தினார்.