பாதிரியார் ஒருவர் மக்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது இமானுவேல் என்னும் சிறுவன் மேடையேறி ஒலிவாங்கிக்கு முன்சென்றான். ஆனால் கேள்வி கேட்க தயங்கியபடி நின்றான். விரக்தியும் சோகமும் அவனது முகத்தில் தெரிந்தது. சிறுவனை அருகில் அழைத்து, கேள்வியை தம் காதில் ரகசியமாக சொல்லும்படி பாதிரியார் கேட்டார். இருவருக்கும் இடையே உரையாடல் தொடர்ந்ததால் கூட்டத்தில் அமைதி நிலவியது. உரையாடல் முடிந்ததும் சிறுவனின் அனுமதியுடன் அவனது கேள்வியை ஒலிபெருக்கியில் தெரிவித்தார். அவனது தந்தை இறந்து சில நாட்களே ஆகிறது. அவர் ஒரு நாத்திகர். ஆனாலும் தன் நான்கு குழந்தைகளும் ஆண்டவரை வழிபட அனுமதித்தார். அச்சிறுவன் ‛‛ என் தந்தை நல்லவர், ஆனாலும் நாத்திகர். அவருக்கு விண்ணகத்தில் இடம் உண்டா’’ எனக் கேட்டான். ‛‛ ‘‘நிச்சயம் இடம் உண்டு’’ என சப்தமாக கூறி விட்டு இதுவே இமானுவேலுக்கான பதில் என முடித்தார்.