கடுமையான கோடை காலம். ஒரு தாயும், ஏழு வயது மகளும் ரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் நடந்தனர். முதியபெண் ஒருவர் வாடிய முகத்துடன் நின்றிருந்தார். அந்த தாய் சில்லறையை, மகளிடம் கொடுத்து போடச் சொன்னாள். ‘‘பாட்டி.’’ என அழைத்து கையில் கொடுத்தாள் மகள். சிறிது துாரம் சென்றதும் யாரோ பின்தொடர்வது போல தோன்ற திரும்பிப் பார்த்தனர். அந்த பெண் நெருக்கமாக வந்து கொண்டிருந்தார். குழந்தையை பார்த்து சிரித்தாள். தாய் குழந்தையை அணைத்தபடி, ‘‘என்ன வேணும்? ஏன் வர்றீங்க?’’ கண்கள் கலங்கியபடி, ‘‘அம்மா... பல வருஷமா இங்கு பிச்சை எடுக்குறேன். இதுவரை யாரும் இப்படி அன்போட கூப்பிட்டதில்லை. குழந்தை கூப்பிட்டுச்சா அதான் கண் கலங்கிட்டேன். மன்னிச்சுருங்க அம்மா’’ என்று சொல்லி முன்னே நடந்தார். இதை கவனித்த குழந்தை மீண்டும் ‘‘பாட்டி’’ என்றாள். புல்லரித்துப் போன பெண் திரும்பினார். குழந்தை ஓடிச் சென்று தன் ரொட்டிகளை பாட்டிக்கு கொடுத்தது. அன்புக்காக ஏங்குபவர்கள் பலர் உலகில் உள்ளனர். முடிந்தளவு அன்பை பகிர்ந்தால் பூமியெங்கும் பூங்காவாகும். ஒவ்வொரு அன்பு பரிமாற்றத்தின் போதும் நமக்குள் தேவன் வந்து செல்கிறான் என்கிறது பைபிள்.