சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட இக்கோவிலின் மாசிமகத்திருவிழா கடந்த பிப். 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5 ம் நாளான நேற்று ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி ஆத்மநாயகி அம்மனும், பிரியாவிடையுடன் ருத்ர கோடீஸ்வரரும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
விழா சதுர்வேதமங்கலம் அம்பலக்காரர் காந்தி அம்பலம் மற்றும் கோயில் பேஸ்கார் கேசவன் தலைமையில் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க உசாபதி சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்று திருக்கல்யாண கோலத்தில் இறைவன் இறைவியை வழிபட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. 6 ம் நாளான இன்று கழுவன் திருவிழாவும், மார்ச் 7 ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. மார்ச் 8 ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.