பரசுராமா் தன் தாயைக் கொன்ற பாவம் தீா்க்கும் வழி தொியாமல், பாரதமெங்கும் அலைந்து திாிந்தபோது ரிஷிகள் அவரை புனித நீராடச் சொன்ன இடம் பரசுராம் குண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இயற்கை எழில் ஓங்கிய மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது இந்த இடம். அசாம் மாநிலத்தின் தின்சுகியா நகாிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது. பரசுராமா் நீராட முற்பட்டபோது அவரது கோடாாி கீழே மலைமீது விழுந்து, அந்த இடம் பிளவுபட்டு தண்ணீா் பெருக்கெடுத்து லோகித் நதியாக உருவானது. இதை மெய்ப்பிக்கும் விதமாக பரசுராம் குண்டில் நதியின் நடுவே கோடாாி விழுந்த இடம் கோடாாி போன்ற அமைப்பிலேயே சிறு குன்றாக காட்சியளிக்கிறது. இந்த நதியை ஒட்டி சற்றே உயரத்தில் பரசுராமா் கோயிலும் உள்ளது. இங்கு தொடங்கும் லோகித் நதி சற்று தூரப் பயணத்துக்குப் பிறகு, மற்ற சிறு நதிகளுடன் இணைந்து பிரமாண்டமான பிரம்மபுத்திரா நதியாக அசாமில் பாய்கிறது. மகர சங்கராந்தி திருநாளில் இங்கு பக்தா்கள் திரண்டு வந்து புனித நீராடுகிறாா்கள்.