Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ராமாயணம் பகுதி - 18 ராமாயணம் பகுதி - 18 ராமாயணம் பகுதி - 20 ராமாயணம் பகுதி - 20
முதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்
ராமாயணம் பகுதி - 19
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 மே
2012
15:42

உமது குடும்பம் மட்டும் யோக்கியமான குடும்பமா? என் தாயை அவமானப்படுத்தி பேசுகிறாரே உமது அமைச்சர் என தசரதரைப் பார்த்து கொதித்தாள் கைகேயி. சகரன் என்ற அரசன் உமது வம்சத்தில் இருந்தான். அவனது மகன் அசமஞ்சன். அவனை சகரன் நாட்டைவிட்டே விரட்டியடித்தான். உமது முன்னோர் செய்த காரியத்தைதானே இப்போது நீர் செய்யப்போகிறீர். இது ஒன்றும் உமது குலத்திற்கு புதிய விஷயமல்லவே. உமது குல யோக்கியம் இப்படி இருக்க என் தாயை எப்படி அவமானப்படுத்தலாம்? என்று எரிந்து விழுந்தாள். தம்பதிகளுக்குள் சண்டை வந்தால் பிறந்தவீடு, புகுந்தவீடு என்ற பாகுபாடு வந்துவிடும். அவரவர் குடும்பத்தில் உள்ள குறைகளை பலரும் கேட்கும்படியாக கத்தி தீர்த்துவிடுவார்கள். இதனால் தங்கள் குலத்திற்கு இழுக்கு வருமே என அவர்கள் கவலைப்படுவதில்லை. சாதாரண சுப்பன் குடும்பம் முதல் மகாராஜா தசரத சக்ரவர்த்தி குடும்பம் வரை இந்த பூவுலகில் இந்த புக்ககம், பிறந்தகப் பெருமைச் சண்டை மட்டும் விதிவிலக்கே இல்லாமல் நடந்திருக்கிறது. வாயை மூடு கைகேயி என்ற குரல் அப்போது ஆவேசமாக எழுந்தது. குரல் வந்த திசை நோக்கி அனைவரும் பார்த்தனர். அங்கே சித்தார்த்தர் என்ற ஞானி வந்துகொண்டிருந்தார். அவர் தசரதருக்கு மிகவும் வேண்டியவர். முதியவர். கள்ளங்கபடு இல்லாதவர். நீதிமான். அந்த மகா பெரியவர்தான் கைகேயியைப் பார்த்து இவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார்.

கைகேயி! நீ செய்வது கொஞ்சம்கூட நியாயமல்ல. ராமன் இல்லாமல் அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும்? அவன் மீது ஏதாவது குற்றம் குறை இருந்தால் சொல். அவனை நானே வெளியே அனுப்பிவிடுகிறேன். அப்படி எந்த குற்றம் குறையும் உன்னால் சொல்லமுடியாது. ஒரு தவறும் செய்யாத பிள்ளையை வெளியே அனுப்பு என நீ சொல்வதை எல்லாம் நாட்டுமக்களான நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்நாட்டின் பிரஜை என்ற முறையில் இதை நான் எதிர்க்கிறேன். சற்று முன்பு நீ சகரனைப்பற்றியும், அசமஞ்சனைப்பற்றியும் பேசினாய். அன்று என்ன நடந்தது என்பதைப் பொறுமையாகக் கேள். அசமஞ்சன் ஒரு கொடூரன். அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை திடீர் திடீரென பிடிப்பான். அவர்களை சரயு நதியில் வீசுவான். அந்தக்குழந்தைகள் நீந்தத்தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுவதைப்பார்த்து கைகொட்டி சிரிப்பான். மூச்சுவிட முடியாமல் திண்டாடுவதை ரசிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நீரில் மூழ்கி இறப்பதை வேடிக்கை பார்ப்பான். இந்த கொடுமை பற்றி மக்கள் சகரனிடம் தெரிவித்தனர். நாங்கள் எல்லாம் இந்த நாட்டை விட்டே வெளியேறப் போகிறோம். ஒன்று உமது மகன் அசமஞ்சன் இங்கு இருக்கட்டும். அல்லது நாங்கள் இருக்கிறோம். என்ன முடிவு சொல்கிறீர்? என கேட்டார்கள்.

நீதிமானான சகரன் தன் மகன் அசமஞ்சனையும், அவனது மனைவிகளையும் நாட்டைவிட்டே வெளியேற்றிவிட்டான். அவர்கள் காடுகளில் திரிந்தார்கள். அசமஞ்சன் கொடுமைக்காரன். அதனால் நீதி தவறாத அவனது தந்தை அவனை வெளியேற்றினான். அதுபோல் ராமன் ஏதாவது குற்றம் செய்தானா? உன்னை எதிர்த்து பேசினானா? உண்மைநிலை இப்படி இருக்க, நீ ராமனையும், அசமஞ்சனையும் எப்படி ஒப்பிட்டு பேசலாம். நீ செய்வது, சொல்வது எதுவுமே நியாயமல்ல என்று சொல்லி பார்த்தார். கைகேயி எதையுமே கண்டுகொள்ளவில்லை. ஒருகாலத்தில் மிகவும் நல்லவள் என பெயர் பெற்றிருந்த அந்த பெண்மணி, இன்று அனைவரிடமும் கெட்ட பெயர் எடுத்துக்கொண்டிருந்தாள். தசரதர் கைகேயியிடம், சித்தார்த்தர் சொன்னதை கேட்டாயா? கேட்டாலும் நீ மாறமாட்டாய் என்பது எனக்குத்தெரியும். ஏனெனில் நீ நீசக்காரி. இனியும் இந்த அரண்மனையில் நான் தங்கமாட்டேன். என் மகனோடு போகிறேன். நீ பரதனோடு உன் இஷ்டப்படி செல்வத்தை எல்லாம் செலவிட்டு நாட்டை ஆண்டுகொண்டிரு, என்று பயமுறுத்தி பார்த்தார். அப்போது ராமபிரான் குறுக்கிட்டார். தந்தையையும், சித்தார்த்தரையும் நோக்கி, இந்நாட்டின் செல்வம் எனக்கு பெரிதல்ல. நான் செல்வத்தையும், அரண்மனை போகங்களையும் ஆட்சி அதிகாரத்தையும் வெறுக்கிறேன். அவற்றின்மீது எனக்கு ஆசை இல்லை, என்றார். தசரத மகாராஜாவுக்கு மனம் கேட்கவில்லை. ராமனுடன் தனது படைகளும் கருவூலத்தில் உள்ள செல்வமும் கொண்டு செல்லப்படட்டும் என உத்தரவிட்டார். கைகேயி இதை தடுத்தாள்.

காட்டுக்குப் போகிறவனுக்கு செல்வமும் படைகளும் எதற்கு? அவை ராமனுடன் போய்விட்டால் இங்கு நான் எதை வைத்து ஆள்வேன்? வேண்டுமென்றே இப்படி செய்கிறீர்களா? வரம் கொடுத்ததுபோல் நாடகமாடுகிறீர்களா? என்றாள்.தசரதர் மேலும் துக்கித்தார். நாசகாரியே! அவனது  செலவுக்குரிய செல்வத்தைக் கூட கொடுக்க மறுக்கிறாயே, சதிகாரி, என திட்டினார். அதற்கு மேல் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. ராமனை காட்டிற்கு உடனடியாக கிளம்பும்படி உத்தரவிட்டாள் கைகேயி. ராமபிரான் மிகுந்த அமைதியுடன், தாயே! தாங்கள் சொன்னபடி மரவுரி தரித்து உடனே கிளம்பிவிடுகிறேன். எனக்கும் லட்சுமணனுக்கும், சீதாவுக்கும் மரவுரி வரட்டும் என்றார்.இரக்கமற்ற கைகேயி மரவுரியை தன் கை யாலேயே எடுத்துவந்தாள். உடனடியாக அணிந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு அகலும்படி சொன்னாள். ராமபிரான் விலை உயர்ந்த வஸ்திரங்களை எல்லாம் களைந்துவிட்டு, மரவுரியை உடுத்திக் கொண்டார். இளவல் லட்சுமணனும் மரவுரி தரித்தான். ஆனால், சீதாதேவிக்கு மரவுரி தரிக்கத் தெரியவில்லை. உடுத்தத் தெரியாமல் திண்டாடினாள். காலமெல்லாம் செல்வச்செழிப்பில் வளர்ந்த அந்த திருமகள், இன்று ஒரு சந்நியாசினியின் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள். அவள் மரவுரியை கட்டத்தெரியாமல் திணறுவதைப் பார்த்த அந்தப்புர பெண்களெல்லாம் கண்ணீர் விட்டு அழுதனர்.

எவ்வளவு பெரிய ராஜகுமாரி? ஜனக மகாராஜாவின் புத்திரி. தங்கத்தட்டில் சாப்பிட்டவள். இன்று கணவனுக்காக காட்டிற்கு போகிறாள். இவளது பாதங்களில் தூசி பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னால் செல்லும் பணியாட்கள் தரையை தூர்த்துக்கொண்டே செல்வார்களாம். அப்படிப்பட்டவள் இன்று கல்லிலும், முள்ளிலும் நடக்கப்போகிறாள். எவ்வளவு பெரிய தியாகவதி. மனைவி என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வருத்தம் ததும்ப புகழ்ந்தனர். பணமில்லை, பணமில்லை என பிதற்றுபவர்கள் இந்தக்கட்டத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமியின் அம்சமான சீதா கூட, காட்டில் போய் காயையும், இலையையும் சாப்பிட வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருக்கிறது. விதியின் போக்கு தெய்வத்திற்காக கூட மாறாது. ராமாயணம் படிப்பவர்கள் மேலோட்டமாக படிக்காமல், உள்ளார்ந்து படித்தால் தான், வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை துணிச்சலுடன் சந்திக்க இயலும். சீதாபிராட்டி மரவுரி கட்டத்தெரியாமல் திணறியதால் ராமபிரானே அதை உடுத்திவிட்டார். அந்தப்புரத்து பெண்கள் இதைத் தடுத்தனர். ராமா! நீ செய்வது கொஞ்சம்கூடநியாயமல்ல. உன் தந்தை உன்னைத்தானே காட்டுக்கு போகச் சொன்னார். நீ உன் மனைவியையும் அழைத்துச் செல்கிறாயே! உன்னைத்தான் பார்க்கமுடியாமல் நாங்கள் 14 ஆண்டுகள் அழப்போகிறோம் என்றால், எங்கள் தலைவியான சீதாபிராட்டியையும் அழைத்து போகிறாயே! அவளை இங்கு விட்டுச்செல். நீ வரும்வரை கவனமாக பார்த்துக் கொள்கிறோம் என்றனர். சீதாப்பிராட்டி அதற்கு மறுப்பு தெரிவித்தாள். அந்நேரத்தில் இக்ஷ்வாகு குல குரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார்.

 
மேலும் இதிகாசங்கள் ராமாயணம் »
temple

ராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்
 
temple

ராமாயணம் பகுதி-5 நவம்பர் 13,2010

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.