பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
05:04
சீதையும் ராமனும் மரவுரி தரித்து நிற்பதைப் பார்த்து மனம் பதைத்து போனார் வசிஷ்டர். அவருக்கு ஆவேசம் அதிகமாகிவிட்டது. அவர் ராஜகுரு அல்லவா? அக்காலத்தில் குருவுக்கு மன்னர் குலத்தினரை மிகக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமை இருந்தது. அந்த வகையில் கைகேயியை அவர் திட்டித் தீர்த்தார். ஏ நாசகாரி கைகேயியே! உன்னுடைய கேவலமான புத்தியால் இந்த நாடே கண்ணீர்விட்டு தவித்துக் கொண்டிருக்கிறது. உன்னுடைய புகுந்த வீட்டிற்கு மட்டுமின்றி பிறந்த வீட்டிற்கும் நீ கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டாய். நல்ல நடத்தை என்ற வார்த்தையாவது உனக்கு தெரியுமா? நீ கேட்ட வரத்தின்படியே அனைத்தும் நடக்கட்டும். அதன்படி ராமன் மட்டும் காட்டுக்கு போகட்டும். கணவனில் பாதி மனைவி என்பது கிருகஸ்தர்களுக்கு பொருந்தும் வார்த்தை. அந்த வகையில், ராமனுக்கு சொந்தமான இந்த பூமியை ஆளும் உரிமை அவனில் பாதியான சீதைக்குத்தான் உண்டு. ஒருவேளை சீதாதேவி இதற்கு விரும்பாவிட்டால் நாங்களும் அவளுடன் காட்டிற்கு போகிறோம். இந்த நாட்டில் ஒரு ஈ, எறும்புகூட மிஞ்சாது என்பதை புரிந்துகொள்.
ராமன் காட்டிற்கு புறப்பட்டால் இங்கிருக்கும் பசுக்கள்கூட அவனை ஏக்கப்பார்வை பார்க்கும். அவனோடு அவை போய்விடும். உன் மகன் பரதன், சத்ருக்கனன் ஆகியோரும் இங்கே தங்கமாட்டார்கள் என்பதை புரிந்துகொள். ஏனெனில், அவர்கள் எங்கள் மகாத்மா தசரதரின் புத்திரர்கள். அந்த நல்ல மனிதருக்கு பிறந்த பிள்ளைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள். அவர்களும் ராமனோடு போய்விடுவார்கள். இங்கே மரங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும். அந்த மரங்களை கட்டிக்கொண்டு நீயே அழு. உன் மகன் இந்த நாட்டை ஆள்வான் என எண்ணாதே. அதில் அவனுக்கு துளியளவும் விருப்பம் இருக்காது. நீயே உன் கையால் சீதை உடுத்தியிருக்கும் மரவுரியை அவிழ்த்து எறிந்துவிடு. அவளுக்கு விலை உயர்ந்த அணிகலன்களை சூட்டு. நல்ல ஆடைகளை கொடு. அவள் சர்வ அலங்காரத்துடன் இந்த நாட்டை விட்டு செல்லட்டும், என்றார். சீதாதேவி வசிஷ்டரைப் பணிந்தாள். மாமுனிவரே! நான் என் கணவரைப் போலவே மரவுரி தரித்தே காட்டிற்கு செல்கிறேன். என் கணவர் தபஸ்வியைப்போல வேடமிட்டிருக்கும்போது நான் மட்டும் அலங்காரம் செய்தால் நன்றாக இருக்காது, என்றாள்.
இதைக்கேட்டு தசரதர் மிகுந்த துக்கமடைந்தார். ஒன்றும் அறியாத ராமனையும், சீதையையும் காட்டிற்கு அனுப்புவதுகுறித்து வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றார். ஊர்மக்களெல்லாம் தசரதரை கடுமையாக நிந்தித்தனர். ஒரு பிரஜை, தசரத ராஜா! தாங்கள் நீதி தவறிவிட்டீர்கள், என வெளிப்படையாகவே சொன்னான். இதைக்கேட்டு மன்னர் அதிர்ந்துபோனார். என் நாட்டின் சாதாரண பிரஜை என்னை நிந்தித்துவிட்டான். இனியும் நான் வாழ்வதில் அர்த்தமில்லை. அதேநேரம் அவன் நியாயத்தையே பேசியிருக்கிறான். நாளை இந்த உலகம் முழுமையும் என்னை நிந்திக்கப்போகிறது. அதற்குள் என் உயிர் போய்விட வேண்டும். மாபாவி கைகேயியே! இனியாவது நான் சொல்வதை கேள். ராமனை காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற வரத்தை தவிர, வேறு எந்த உறுதியையும் நான் உனக்கு கொடுக்கவில்லை. எனவே சீதையின் மரவுரிகளை திரும்ப வாங்கிவிடு. அவள் தன் கணவனைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதவள். உனக்கு எக்காலத்திலும் மரியாதையே தந்தவள். அந்த நன்றிக்காகவாவது அவளை விட்டுவிடு. இல்லாவிட்டால் உனக்கு நற்கதி கிடைக்காது. உலகில் உள்ள அத்தனை நரகங்களும் உன்னை சூழ்ந்து நிற்கும், என்று சாபமிட்டார். கைகேயி அசையவில்லை.
எதற்கும் கலங்காமல் நின்ற மனைவியைப் பார்த்து மயக்கமும் வந்தது. தரையில் சாய்ந்துவிட்டார். அவருக்கு ராமபிரான் மூர்ச்சை தெளிவித்தார்.
தந்தையிடம், அன்புக்குரிய மகாராஜா! தங்களைப்போன்ற தர்மவான் இந்த பூமியில் இல்லை. நான் காட்டிற்கு புறப்படும் முன் ஒரு வரம் கேட்கிறேன். தருவீர்களா? என்றார். மகனை அள்ளி அணைத்துக்கொண்டார் தசரதர். ஹே, ராமா! உனக்கில்லாத வரமா? நீ என்ன கேட்டாலும் தருவேன்,என்றார். தந்தையே! என் தாய் மிகவும் வயதானவள். அவள் மீது நீங்கள் அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள். சத்தியத்தை பாதுகாப்பதில் அவளுக்கு நிகரானவர் யாருமில்லை. நீங்கள் என்னை காட்டிற்கு அனுப்புவதாக சொல்லியும்கூட உங்களிடம் இதுவரை அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உங்கள்மீது கோபப்படவும் இல்லை. மனைவி என்ற உரிமையோடு சண்டை போடவும் இல்லை. அதேநேரம் நான் இங்கிருந்து சென்றுவிட்டால் அந்த துக்கத்தை அவள் தாங்கமாட்டாள். எனவே நீங்கள் அவளுடன் அணுசரணையாக நடக்க வேண்டும். அவளுக்கு அதிக மரியாதை தர வேண்டும். என்னைப் பிரிந்த துக்கத்தால் அவள் இறந்துபோகாதபடி பாதுகாக்க வேண்டும். நான் காட்டிலிருந்து வரும்போது என் தாய் இந்த அரண்மனையில்தான் இருக்க வேண்டும். அவளை எமலோகத்திற்கு சென்று தேடும்படி வைத்துவிடாதீர்கள், என்றார்.
தசரதர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கண்ணீர் விட்டார். புலம்ப ஆரம்பித்தார். ராமா! கடந்த ஜென்மங்களில் நான் மிகப்பெரிய பாவங்கள் செய்துள்ளேன் போலும். பல கன்றுகளை பசுக்களிடமிருந்து பிரித்திருப்பேனோ? எந்த தவறும் செய்யாத பூச்சி, புழுக்களை வதைத்திருப்பேனோ? இதனால்தான் இப்பிறவியில் என் பிள்ளையைப் பிரிந்து துக்கப்படுகிறேன். இந்த கைகேயியிடம் வாழ்வதைவிட என் உயிர் போய்விடுவது மேல். ஆனாலும் இது போக மறுக்கிறது. இன்னும் நான் என்னவெல்லாம் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறதோ? அத்தனையும் அனுபவித்தால் அல்லவா இந்த உயிர் போகும்? என புலம்பி தீர்த்தார். தனது அமைச்சர் சுமந்திரரை அழைத்து ராமன் நாட்டின் எல்லை வரை குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அழைத்துச்செல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டார். தனது கருவூல தலைவனை அழைத்தார். சீதாதேவிக்குரிய ஆபரணங்களை கொண்டுவர உத்தரவிட்டார். இருவரும் வேகமாக செயல்பட்டனர். அனைவரின் வற்புறுத்தலாலும், சீதாதேவி அந்த நகைகளை அணிந்துகொண்டாள். வழக்கத்தைவிட அழகாகத்தோன்றினாள். மாமியார் கவுசல்யா மருமகளை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அவளுக்கு புத்திமதி சொன்னாள். அன்புக்குழந்தையே! இந்த உலகத்தில் உள்ள பெண்களைப்பற்றி நான் அறிவேன். ஒரு கணவன் பணக்காரனாக இருக்கும்போது அவனுக்கு மனைவி தகுந்த மரியாதை கொடுப்பாள். அதே கணவனுக்கு கஷ்டம் வந்து செல்வம் குறைந்துபோனால் இதற்கு முன் செய்த நன்றியை மறந்துவிடுவாள். அதுமட்டுமல்ல. கட்டிய கணவனையே அலட்சியம் செய்வாள். அவனால் எவ்வளவு சுகத்தை அனுபவித்திருந்தாலும், பணம் என்ற அற்ப சந்தோஷத்திற்காக அவனையே தூஷிப்பாள். சிலபெண்கள் அந்த கணவனைவிட்டு விலகியே போய்விடுவார்கள். அவர்களெல்லாம் பதிவிரதைகள் அல்ல. இப்படிப்பட்ட பெண்கள் தங்களை அக்னிசாட்சியாக விவாகம் செய்த கணவனை தூக்கி எறிந்து விடுவார்கள். கணவனின் பணத்தை தவிர அவர்களுக்கு எதுவுமே தேவையிருக்காது. என் புத்திரன் ராமனும் அரண்மனையில் வசித்தவன். நீயும் அவனோடு சுகவாழ்வு வாழ்ந்துள்ளாய். இதையெல்லாம் மனதில் கொண்டு, அவனது இன்றைய நிலையக் கருத்தில் கொள்ளாமல், அவன் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும், என்றாள். சீதாதேவிக்கு கண்ணீர் வந்து விட்டது. தாங்கள் என்னையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசிவிட்டீர்களே! என மாமியாரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டாள்.