வீட்டு வேலை செய்து களைத்த பெண்களில் பலர் உடல் வலி, கால்வலி, கைவலி என ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் வேலைக்கு ஆள் வைக்கின்றனர்.. இவர்களுக்கு இந்நிகழ்ச்சி பாடமாக இருக்கும். நாயகத்தின் மகளான பாத்திமா தன் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, கோதுமை அரைப்பது, ரொட்டி சுடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்தார். அவரது கணவர் அலி ஒட்டகத்துக்கு தீனி வைப்பது, தண்ணீர் காட்டுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளைச் செய்தார். ஒருநாள் பாத்திமா,‘‘ தந்தையே! நான் கோதுமை அரைத்து அரைத்து களைத்து விட்டேன். கைகள் காய்த்து விட்டன. அடுப்பு வேலையால் உடையும், உடலும் கெட்டு விட்டது. என் கணவரும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து களைத்து விட்டார். எனவே உதவியாக அடிமையை நியமியுங்கள்’’ என்றார். ‘‘மகளே! ஒவ்வொரு நாளும் இரவு உறங்கும் முன் ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் துாய்மையானவன்) என்று 33 தடவையும், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று 33 தடவையும், ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப் பெரியவன்)என்று 34 தடவையும் ஓதுங்கள். அது சிரமங்களை போக்கும்’’ என்றார். பாத்திமாவுக்கு தந்தையின் அறிவுரை பேருதவியாக அமைந்தது.