பதிவு செய்த நாள்
09
மார்
2020
03:03
சிலர் வீடோ, காரோ, நகையோ வாங்கியிருப்பர். மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்திருப்பர். சில மாதம் கழித்து அவர்களுக்கு உடல்நலக்குறைவு வந்துவிடும். அப்போது இறைவன் நினைவுக்கு வருவார்.
“இறைவா! ஏன் இப்படி சோதிக்கிறாய்?” என காண்போரிடம் எல்லாம் புலம்புவர். இது சரியான முறையல்ல. இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனை நினைப்பதே சரியான வாழ்க்கை முறை.
ஒருசமயம் மதீனா நகரத் தெருவில், பார்க்கும் திறன் இல்லாத தொழுநோயாளி ஒருவர் சென்றார். அவரைப் பார்த்த ஹலரத் உமர் பாரூக் என்பவர் அருகில் நின்ற நபித்தோழரிடம், “இம்மனிதர் மீது இறைவனின் கருணை இருக்கிறதா?” எனக் கேட்டார். ,“பார்வையற்றவராகவும், உடல் முழுக்க தொழுநோய் பாதிப்பும் உள்ள இவர் மீது அப்படி என்ன இறைவனின் கருணை இருக்கிறது?” என சந்தேகமுடன் எதிர்க்கேள்வி கேட்டார்.
“அவருக்கு இறைவன் சிறுநீர்க்குழாயைச் சரியாகக் கொடுத்திருப்பதால், அதற்காக இவர் நன்றி செலுத்த வேண்டும்” என்றார் ஹலரத் உமர்பாரூக். எனவே ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் இறைவனுக்கு நன்றி செலுத்த கடன்பட்டவனாகவே இருக்கிறான். கஷ்டத்திலும் கூட, நாம் நன்றி செலுத்தியே தீர வேண்டும்.