ஒருமுறை காஞ்சி மடத்தில் சிவபெருமானைப் பற்றி காஞ்சி மகாசுவாமிகள் பக்தர்களிடம் பேசத் தொடங்கினார். ‘உருக்கிய நெய்க்கு நிறம் கிடையாது. ஆனால் அதுவே குளிர்ந்ததும் வெண்ணிறமாகி விடும். அது போல கடவுளுக்கும் உருவம் கிடையாது. ஆனால் பக்தி உணர்வு எழும் போது அவரவர் மனதிற்கேற்ற உருவத்தை பெறுகிறார். சிவபெருமான் மண்ணில் அவதரிக்கவில்லை என்றாலும் பலவித வடிவங்களில் தோன்றி பக்தர்களைக் காக்கிறார். பிட்சாடன மூர்த்தியாக காட்சி தரும் போது ஆடை, ஆபரணம் இன்றி இயற்கை அழகுடன் இருக்கிறார். அவரே சுந்தரேஸ்வரராக வரும் போது அழகும், கம்பீரமும் கொண்டவராகிறார். திருவடியில் சரணடைந்தவருக்கு அபயம் கொடுக்கும் பைரவரும் அவரே! வீரம் பொங்க வீரபத்திரராக நிற்பவரும் அவரே. அம்பலத்தில் இடக்காலைத் துாக்கி நடராஜராக நடனமாடுவதும்,. ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தியாகி சனகாதி முனிவர்களுக்கு உபதேசிப்பதும் சிவனே. இப்படி அறுபத்து நான்கு கோலங்கள் அவருக்கு உண்டு. அன்னப் பறவையாக வானில் பறந்த பிரம்மாவால், சிவபெருமானின் திருமுடியைக் காண முடியவில்லை. பன்றி வடிவில் பூமிக்கடியில் குடைந்து சென்ற மகாவிஷ்ணுவால் அவரது திருவடியைக் காண முடியவில்லை. இருவரும் காண முடியாத கடவுளை பக்தர்கள் மனக்கண்ணில் தரிசித்து மகிழலாம்.. மும்மூர்த்திகளான பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்கின்றனர். இவர்களில் கருணை மிக்கவர் யார் என்றால் சிவபெருமான் தான்! ஏன் தெரியுமா? நல்லவர்கள், தீயவர்கள், புண்ணியம் செய்தவர்கள், பாவிகள், ஞானிகள், அஞ்ஞானிகள் என எத்தனையோ விதமானவர்கள் உலகில் இருக்கின்றனர். யாரிடமும் அவர் பாகுபாடு காட்டுவதில்லை. அழிக்கும் போது (சம்ஹார காலத்தில்) சுகம், துக்கத்தில் இருந்து உயிர்களுக்கு ஓய்வு அளிக்கிறார். பக்தர்கள் அனைவரும் பூசலார் நாயனாரைப் போல மனதில் கோயில் கட்டுங்கள். கிடைக்கும் நேரங்களில் தென்னாடுடைய சிவனைப் போற்றுங்கள். அவனது திருநாமத்தை பாடுங்கள். .‘ நமசிவாய’ என ஜபிப்போருக்கு வாழ்வில் சகல சவுபாக்கியம் உண்டாகும். ‘யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை’ என்கிறது திருமந்திரம். தினமும் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு அர்ச்சனை செய்தாலும் போதும். மனம் குளிர்ந்து அருள்புரிவார்!’’ என்றார்.