பதிவு செய்த நாள்
10
மார்
2020
01:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த, பந்த சேவை நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தீபங்களை ஏந்தி வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9-ம் தேதி மாலை தேரோட்டம் நடந்தது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து நடந்த தண்ணீர் சேவையில், தெப்பக்குளம் கருட தீர்த்தத்தில் இருந்து, பக்தர்கள் தண்ணீரை எடுத்து வந்து, உற்சவமூர்த்தி பெருமாள் மீது ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பந்த சேவை நிகழ்ச்சி துவங்கியது. காலையிலிருந்து இரவு வரை, கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தங்களை ஏந்தி, தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் வழியாக வலம் வந்து, அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர். சரணம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள், ராட்சத தீப்பந்தம் ஏந்தி வந்தனர். இன்று இரவு, 10:30 மணிக்கு சஷே வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.